உப்பூர் காசடிக்கொல்லை சாலையை சீரமைக்க வேண்டும்


உப்பூர் காசடிக்கொல்லை சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

முத்துப்பேட்டை அருகே உப்பூர் காசடிக்கொல்லை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே உப்பூர் காசடிக்கொல்லை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

முக்கிய வழித்தடம்

முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் புதுரோடு ரெயில்வே கேட் அருகே தொடங்கி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வழியாக செல்லும் காசடிக்கொல்லை சாலை உள்ளது. இந்த சாலையானது சுமார் 1 கிலோமீட்டர் சாலையாகும். இந்த சாலை இப்பகுதி மக்களின் முக்கிய வழித்தடமாகும். இந்த சாலை அமைத்து 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவ்வழியாக இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுபகுதி கிராம மக்களும் தொலைதூரம் செல்ல இவ்வழியாக வந்து புதுரோடு ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வருகின்றனர்.

இங்கிருந்து ஒருபுறம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கும், மறுபுறம் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கும் செல்லவேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அதேபோன்று தொலைதூரம் செல்லும் பொது மக்களும் இவ்வழியாகதான் வந்து கடைதெருவுக்கு வரவேண்டும். அதேபோல் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி வயலுக்கும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.

சேதமடைந்து உள்ளது

குறிப்பாக சுற்று பகுதி கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடி வயல்களுக்கு இடுபொருட்களை இவ்வழியாகதான் எடுத்து செல்ல வேண்டும். மேலும் அவர்கள் விளைவித்த நெல்லை இந்த சாலை வழியாகதான் கொண்டு வரவேண்டும். இப்படி அனைத்து தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிகிறது.

இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து மக்களும் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த சேதமடைந்த சாலையால் அடிக்கடி சிறு விபத்துகளும் நடந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story