வேரோடு சாய்ந்த ஆலமரம்
பட்டிவீரன்பட்டி அருகே வேரோடு ஆலமரம் சாய்ந்தது.
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் அத்திக்குளம் கண்மாய் பகுதியில் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் நேற்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் விவசாய தோட்டங்களுக்கு சென்ற உயர்அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரமாக இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அய்யம்பாளையம் துணைமின் நிலைய உதவி பொறியாளர் செல்லக்காமாட்சி தலைமையிலான பணியாளர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் கூறுகையில், தற்காலிகமாக சில விவசாய தோட்டங்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் கொண்டு செல்லும் பகுதிகளில் வேலை நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் இப்பகுதி விவசாயிகளுக்கு முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என்றார். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகள் பழமையான மரத்தின் நடுப்பகுதியில் பெரிய அளவில் பொந்து ஒன்று இருந்தது. இதில் மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. தீவைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.