தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து காட்டு யானை அட்டகாசம்
பழனி அருகே புளியம்பட்டியில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது.
காட்டு யானை அட்டகாசம்
பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. அணைக்கு அருகில் பாலாறு, பொருந்தலாறு, புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மலையடிவாரத்தை ஒட்டியுள்ள இந்த கிராம பகுதியில் தென்னந்தோப்புகள், கரும்பு தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. வனப்பகுதியில் உள்ள காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக அடிக்கடி மலையடிவார பகுதிக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. அப்போது வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.
இந்தநிலையில் பொருந்தலாறு, புளியம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் தோட்ட பகுதியில் உலா வரும் யானை, அங்கு இருக்கும் தென்னை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.
தென்னை மரங்கள் சேதம்
அதன்படி, நேற்று முன்தினம் இரவு புளியம்பட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. மேலும் சில மரங்களின் கிளைகளை ஒடித்து தின்றுவிட்டு சென்றது. இந்தநிலையில் காலையில் தோட்டத்துக்கு சென்று பார்த்த விவசாயிகள், தென்னை மரங்கள் சேதமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் யானை அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் கோகுலகண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "அணை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை தற்போது தோட்ட பகுதிகளிலும் உலா வருகிறது. எனவே தோட்டத்தில் யானை நடமாட்டம் இருந்தால் விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக சத்தம் எழுப்பி யானையை விரட்ட வேண்டாம். யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்றனர்.