தூய்மை பணியாளர் சாவுக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தல்


உடன்குடியில் தூய்மை பணியாளர் சாவுக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று இறந்த சுடலைமாடனின் மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடியில் தூய்மை பணியாளர் சாவுக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று இறந்த சுடலைமாடனின் மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தூய்மை பணியாளர் மனைவி

உடன்குடியில் தற்கொலை செய்து கொண்ட பேரூராட்சி தூய்மைப் பணியாளர் சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சாதி பெயரை கூறி அவதூறாக பேசியதால் எனது கணவர் சுடலைமாடன் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். உடன்குடி பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பேரூராட்சி பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஆயிஷா கல்லாசியை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பள்ளிக்கூட விவகாரம்

விளாத்திகுளம் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் இடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் வழங்கப்பட்டது. தற்போது பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கலெக்டர் உத்தரவின் பேரில் குழந்தைகளின் நலனை கருதி, அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி சிலர் பிரச்சினை செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இந்த இடத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டில் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விசயத்தில் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு அந்த பட்டாவை ரத்து செய்து, அந்த நிலத்தை பள்ளி நிர்வாகம் பெயரிலேயே கிராம கணக்கில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆட்டோ டிரைவர்கள் புகார்

திருச்செந்தூர் தாலுகா ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் செயலாளர் வி.ஆண்டி தலைமையில் திருச்செந்தூர் சன்னதி தெரு ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூர் சன்னதி தெரு ஆட்டோ நிறுத்தத்தில் 15 பேர் ஆட்டோக்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் அரசு ஊழியர் ஒருவர் தனது 2 ஆட்டோக்களை இங்கு நிறுத்தி எங்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து கேட்டால் எங்களை மிரட்டி வருகிறார். எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், நான் கட்டுமான காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டதற்காக ரூ.1 கோடியே 91 லட்சம் பணம் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. கட்டுமான தளவாட பொருட்களையும் ஆலையில் இருந்து எடுக்க முடியவில்லை. ஆகையால் எனது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story