நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திகுறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சின்னமனூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
சின்னமனூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி மற்றும் வருவாய், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது நீர் நிலைகளை தனியார் அமைப்பினர் பயன்படுத்தும் வகையில், நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 என்ற சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தால், விற்பனை செய்யப்படும் நிலங்களை ஒட்டியுள்ள அனைத்து நீர் நிலைகளும் சம்பந்தப்பட்ட தனியாருக்கு சென்று விடும்.
விவசாயிகள் வெளிநடப்பு
இதனால் நீர் நிலைகள், நீர்வழிப்பாதைகள் பாழாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே ஆபத்தான இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் காடுகளில் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலை மாடுகளின் எண்ணிக்கை தேனி மாவட்டத்தில் குறைந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வனத்துறை சார்பில், நடத்தப்படவேண்டிய கூட்டமும் 6 மாதத்திற்கு மேலாக நடைபெறவில்லை.
எனவே காடுகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கர்னல் ஜான் பென்னிகுயிக் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினரும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.