சுற்றித்திரியும் நாய்களுக்கு விரைவில் கருத்தடை அறுவை சிகிச்சை
வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு விரைவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு விரைவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாய்கள் தொல்லை
வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாநகராட்சியின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம், கூட்டமாக அவை சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதனால் இரவு நேரங்களில் வேலை முடித்து செல்லும் பலர் அச்சத்துடனே வீட்டிற்கு செல்கிறார்கள்.
மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை மற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவற்றை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக வேலூர் முத்துமண்டபம் பகுதியில் உள்ள பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கருத்தடை அறுவை சிகிச்சை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் பெருக்கத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே கொரோனா காலக்கட்டத்தில் செயல்படாமல் இருந்த பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். சிகிச்சை மையம் சீரமைக்கும் பணிகள் 10 நாட்களுக்குள் முடிவடையும்.
அதைத்தொடர்ந்து அந்த மையம் அடுத்த மாதம் (டிசம்பர்) தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்படும். அவர்கள் தெருநாய்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பிடித்து அறுவை சிகிச்சை செய்வார்கள். இதன் மூலம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும் என்றனர்.