1,225 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,225 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது.
சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,225 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது.
3 போக சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போக சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குறுவை அறுவடை பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. சம்பா, தாளடி சாகுபடிக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் போதுமான அளவு உரம் இல்லை எனவும், பல இடங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், போதுமான அளவு உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
யூரியா உரம்
இந்தநிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 21 வேகன்கள் மூலம் 1,225 டன் யூரியா உரம் நேற்றுகாலை தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.