கிருஷ்ணர் கோவிலில் உறியடி திருவிழா
கோத்தகிரி அருகே கிருஷ்ணர் கோவிலில் உறியடி திருவிழா நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கடந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று, கோவிலில் உறியடி திருவிழாவில் உறியடிப்பதற்காக கோவிலில் காணிக்கை கட்டி பூப்போட்டு தேர்வு செய்யப்பட்ட இளைஞரும், அதே போல உறியடி திருவிழாவில் தண்ணீரை இறைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேரும் கலந்துகொண்டு உறியடித்தனர். விழாவில் கிராம மக்கள் அனைவரும் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இதில் கன்னேரிமுக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னேரிமுக்கு ஊர்மக்கள் செய்திருந்தனர்.