உறியடி- வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி


உறியடி- வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
x

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெரம்பலூரில் உறியடி திருவிழா- வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

திருவீதி உலா

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து உற்சவர் நவநீத கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியம் முழங்க நேற்று காலை புறப்பட்டு எடத்தெரு கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றடைந்து ஸ்ரீ ராஜகோபால சுவாமி பஜனை மடத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வெண்ணைத்தாழி விழா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணியளவில் மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் மதனகோபாலசுவாமி பல்லக்கில் வைக்கப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டார்.

வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

பின்னர் மாலை 5 மணியளவில் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள நான்குகால் மண்டபம் அருகே கோவில் திட்டப்படி உறியடி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பெரிய தெற்கு தெரு, அய்யப்பன் கோவில் அருகேயும், மேற்கு வானொளி திடல் அருகேயும், மதனகோபாலசுவாமி கோவில் தேரடி அருகேயும் உறியடி திருவிழாவும், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. உறியடிப்பவர் மீது மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை பக்தர்கள் ஊற்றினர்.

அதனை மீறி உறியடிப்பவர் கம்பால் பானையை அடித்து உடைத்தார். இதனை தொடர்ந்து இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் மதனகோபாலசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story