பள்ளி மாணவிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நிதியுதவி
சாத்தான்குளத்தில் இருதய அறுவை சிகிச்சைக்காக பள்ளி மாணவிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் இருதய அறுவை சிகிச்சைக்காக பள்ளி மாணவிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
மாணவிக்கு நிதியுதவி
சாத்தான்குளம் தோப்புவளம் சாலையைச் சேர்ந்தவர் கணேஷ் சங்கர். நகைத்தொழிலாளியான இவரது மகள் அழகு மகேஷ்வரி பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இருதயத்தில் நரம்பு தொடர்பாக அறுவை சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். இதனையடுத்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர் அவர்களது கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ., மாணவியின் வீட்டிற்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
அப்போது, மாவட்ட துணை தலைவர் சங்கர், வட்டார தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஏரல்
மேலும், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழையகாயல்-மங்கம்மாள் சாலை ரூ.48.87 லட்சம் மதீப்பீட்டிலும், கணேசநகர் சாலை ரூ.49.85 லட்சம் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான தொடக்க விழா பழையகாயலில் நடந்தது.
எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய தார் சாலை அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அங்கு திரண்டிருந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் கழக செயலாளர் ராயப்பன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மதிவாணன், ஆணையாளர்கள் சிவராஜன், செல்வி, ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆறுமுகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்
இதேபோன்று, சாயர்புரம் அருகே உள்ள மஞ்சள்நீர் காயலில் புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும். புதிய சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மஞ்சள்நீர் காயல் பஞ்சாயத்து தலைவர் விஜயா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் துரை பாலமுருகன், யூனியன் கவுன்சிலர் கணேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், இளைஞரணி, தலைவர் இசை சங்கர், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல்
ஆழ்வார்திருநதரி ஒன்றியம் கருவேலம்பாடு கிராமத்தில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கருவேலம்பாடு ஊராட்சி தலைவர் நயினார் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிழற்குடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், எம்.எல்.ஏ. உதவியாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.