அரசியல் செல்வாக்கை சமுதாய நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: அரசியல்வாதிகளுக்கு ஐகோர்ட்டு அறிவுரை
அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வழங்கும் அரசியல் செல்வாக்கை, சமுதாய நலன் சார்ந்த பிரச்சினைக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர சுயநலனுக்காகவும், சமுதாய தீங்கிற்காகவும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை,
சென்னை தியாகராயநகர், அப்துல் அஜிஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த தி.மு.க., வட்டச் செயலாளர் ராமலிங்கம், வாடகையும் கொடுக்காமல், வீட்டையும் காலி செய்யாமல் இருந்தார்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கிரிஜா (வயது 64) என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வீட்டை கிரிஜாவிடம் ஒப்படைக்க வேண்டும். அதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராமலிங்கம் ஏற்கனவே வெளியேறி விட்டதாகவும், வீட்டை கிரிஜாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல் செல்வாக்கு
இதை கிரிஜாவின் தரப்பு வக்கீலும் ஒப்புக் கொண்டார். ஆனால், 5 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்றும் கூறினார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ராமலிங்கம் ஆளும் கட்சியின் வட்டச் செயலாளர் என்பதால், வயதான பெண்மணிக்கு வாடகையை கொடுக்காமல் தைரியமாக உள்ளார். சராசரி மனிதர்களின் வாழ்க்கையில் அரசியல் என்பது ஒரு செல்வாக்குமிக்கதாக உள்ளது.
அரசியல் தலைவர்களின் செய்யும் செயலும், பேசும் வார்த்தைகளும் அவர்களது தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த செல்வாக்கை சட்டவிரோத செயல்களுக்கும், தனிப்பட்ட லாபத்துக்கும் பயன்படுத்தக்கூடாது. அந்த செல்வாக்கை மக்களை நல்வழிப்படுத்துவதில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், இப்போது என்ன நடக்கிறது? பொதுமக்களை மிரட்டுவதற்காகவும், சமுதாயத்தில் பிரச்சினைகளை உருவாக்குவதற்காகவும் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுகிறது.
பகல் கொள்ளை
குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் நிலங்களை அபகரிக்க அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்தை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களின் சொத்துக்களை அபகரிப்பது என்பது பகல் கொள்ளையாகும்.
ஒருவேளை, சமுதாயத்தின் முன்பு சாதாரண மனிதன் செல்வாக்கு இல்லாதவனாக தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு குடிமகனையும் அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது.
அமைதியான வாழ்க்கை வாழ முடியாத நிலையில் ஒரு குடிமகன் இருப்பதை இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நேரில் ஆஜர்
அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வழங்கும் இதுபோன்ற அரசியல் செல்வாக்கை, சமுதாய நலன் சார்ந்த பிரச்சினைக்கு பயன்படுத்த வேண்டும். சுயநலனுக்காகவும், சமுதாய தீங்கிற்கும் பயன்படுத்தக்கூடாது. இந்த வழக்கில் மூத்த குடிமக்களான மனுதாரர் கிரிஜாவும், அவரது கணவரும், பல ஆண்டுகள் வீட்டு வாடகையை வசூலிக்க முடியாமல் உள்ளனர். எனவே, மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ், அவர்களை பாதுகாத்து, கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வது மாவட்ட கலெக்டரின் கடமையாகும்.
மேலும், வாடகை தொகையை ராமலிங்கம் செலுத்தாமல் உள்ளார். அதனால், இந்த வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று வட்டச்செயலாளர் ராமலிங்கம் நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.