மின் விபத்துகளை தவிர்க்க தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்- மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தல்
மின் விபத்துகளை தவிர்க்க தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மின் விபத்துகளை தவிர்க்க தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
தரமான மின்சாதனங்கள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மின்சார விபத்தில் சிலர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற மின்விபத்துகளை தவிர்க்க வீடுகளில் தரம் வாய்ந்த மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். பழுதான மின்சாதனங்களை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும், பள்ளிக்கூடங்கள், கோவில்களிலும் மின்கசிவு தடுப்பு சாதனங்களை பொருத்த வேண்டும். மின் கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மின் கம்பிகளின் பக்கவாட்டில் கட்டிடங்கள் கட்டும்போது போதிய பாதுகாப்பு இடைவெளி உள்ளதா என மின்வாரிய அலுவலரை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திய பின்னரே கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். மின்கம்பிக்கு அருகே கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது சென்ட்ரிங் கம்பிகள், பலகைகள் மற்றும் பூச்சு பலகைகளை கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார், வெல்டிங் எந்திரம், கட்டிங் எந்திரம் போன்ற மின் சாதனங்களுக்கு தரமான பழுது இல்லாத ஒயர்களை பயன்படுத்த வேண்டும்.
வீடுகளுக்கு வெள்ளையடிக்க பயன்படுத்தப்படும் ஏணிகளை கவனமாக கையாள வேண்டும். மின் கம்பிகளில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் சர்வீஸ் ஒயர்களில் பழுது ஏற்பட்டால் மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்க வே்ண்டும். பின்னர் அலுவலர்கள் உதவியுடன் பழுதை சரிசெய்ய வேண்டும்.
மின்வேலிகள்
விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மின்வேலி அமைத்தால் மின்இணைப்பு துண்டிக்கப்படும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல் மின்நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் மின் இணைப்பு இல்லை என்றால், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் தாமாக பழுது நீக்கம் செய்ய கூடாது. மின்வாரிய பணியாளர்கள் மூலமாகவே அதனை சரிசெய்ய வேண்டும். பொதுமக்கள் மின்வினியோகம் குறித்து அனைத்து சேவைகளுக்கும் மின்னகம் மின்னுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.