சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
வதந்தி, தவறான தகவல்கள்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. எனவே சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சென்னையில் முதல்முறையாக மாநில இளைஞர் திருவிழா 4 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இலச்சினையை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
திறமைசாலி
உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ஒன்றியத்தில் இளைஞர்களை அதிகம் கொண்ட 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது.
வெறும் எண்ணிக்கை என்ற அளவில் மட்டுமல்லாமல் இங்கு இருக்கின்ற இளைஞர்கள், இளம்பெண்கள் திறமைசாலிகளாகவும், தனித்துவம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.
அதனால்தான் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக, முதன்மை மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது.
சமூகவலைத்தளங்கள்
தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமூக வலைத்தளங்களான 'டுவிட்டர்', 'பேஸ்புக்', 'இன்ஸ்டாகிராம்' ஆகிய பல்வேறு தளங்களில் இருப்பவர்கள் ஒரு விஷயத்தையோ, பதிப்பையோ, புகைப்படத்தையோ, பார்க்கும்போது அதை பகுத்தறிவு கொண்டு உண்மையானது தானா? என யோசித்து பார்க்க வேண்டும்.
எந்த ஒரு செய்தியையும் பிறருக்கு பகிர்வதற்கு முன்பு அதை கேள்விக்கு உட்படுத்தி உண்மைதானா? என உறுதி செய்து கொண்டு பகிர வேண்டும். ஒரு சின்ன வதந்தி, தவறான தகவல்கள்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆகவே எல்லோரும் பொறுப்புடன் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திட வேண்டும்.
குடியரசு தின அணிவகுப்புக்காக நாட்டு நல பணித்திட்டம், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள் டெல்லிக்கு சென்று வருகிறீர்கள். டெல்லிக்கு செல்ல தற்போது ரெயில் டிக்கெட் மட்டும் எடுத்து தரப்பட்டு வருகிறது. எதிர்வரும் குடியரசு தின அணிவகுப்பிற்கு என்.எஸ்.எஸ். மற்றும். என்.சி.சி. தன்னார்வலர்கள் விமானம் மூலம் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.நா.எழிலன், இ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, கல்லூரி கல்வி இயக்குநர் கீதா, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.