நண்பனின் சிதை நெருப்பில் பாய்ந்த 'உயிர் நண்பர்' உத்தரபிரதேசத்தில் சோகம்


நண்பனின் சிதை நெருப்பில் பாய்ந்த உயிர் நண்பர் உத்தரபிரதேசத்தில் சோகம்
x

அப்போது திடீரென, ‘இதோ... நானும் வருகிறேன் நண்பா...’ என்று கத்திக்கொண்டே சிதை நெருப்புக்குள் பாய்ந்துவிட்டார்.

ஆக்ரா,

'என் நண்பனுக்கான நான் உயிரையும் கொடுப்பேன்' என்று பலரும் வசனம் பேசுவார்கள். ஆனால் நிஜமாகவே அதை நிகழ்த்திவிட்டார், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஆனந்த் கவுரவ் ராஜ்புத் (வயது 42).

இவரும், அதே ஆக்ராவைச் சேர்ந்த அசோக்குமார் லோதியும் (44) சிறுவயது முதலே இணைபிரியா நண்பர்கள். இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். ஒரே நாளில்தான் திருமணமும் செய்துகொண்டார்கள். அசோக்குமார் லோதியின் பண உதவியால்தான் ஆனந்த் கவுரவின் அக்காவின் திருமணம் நடைபெற்றது.

அசோக்குமார் லோதிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது 2 ஆண்டுகளுக்கு முன் உறுதியானது. அதனால் நண்பனுக்கு இணையாக வருத்தத்தில் வாடியவர் ஆனந்த கவுரவ்தான். நண்பனின் மருத்துவ சிகிச்சைக்கு தன்னாலான உதவிகளை செய்துவந்தார்.

ஆனால் அசோக்குமார் லோதி சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை இறந்துவிட்டார். அதில் அதிர்ச்சியில் உறைந்தார் உயிர்த்தோழன் ஆனந்த் கவுரவ். யமுனை நதிக்கரையில் உள்ள மயானத்தில் அசோக்குமார் லோதியின் தகனம் நடந்தது.

இறுதிச்சடங்கு முடிந்து சிதைக்கு நெருப்பு வைத்துவிட்டு எல்லோரும் வெளியேறிக்கொண்டிருந்தனர். ஆனந்த் கவுரவ் மட்டும் கண்ணீருடன், எரியும் நண்பனின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென, 'இதோ... நானும் வருகிறேன் நண்பா...' என்று கத்திக்கொண்டே சிதை நெருப்புக்குள் பாய்ந்துவிட்டார்.

அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு ஆனந்த் கவுரவை நெருப்பில் இருந்து வெளியே இழுத்தனர். ஆனாலும் அவர் 90 சதவீத தீக்காயம் அடைந்துவிட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்வழியில் அவர் இறந்தார். இது அவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனுக்காக உயிரைவிட்ட ஆனந்த் கவுரவ் ராஜ்புத்தின் அண்ணன், 'ஆனந்தும், அசோக்கும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவர்களுக்கு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும் என்பதால் வெளியே இசை நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகவே செல்வார்கள். நண்பனின் இழப்பை தாங்கமுடியாமல் ஆனந்த் இப்படி செய்துவிட்டான்' என்று வேதனையோடு கூறினார்.


Next Story