ரெயில் மூலம் 532 டன் யூரியா உரம் வந்தது
திருப்பூர், செப்.18-
திருப்பூர் மாவட்டத்தில் ராபி பருவத்துக்கு ரெயில் மூலம் 532 டன் யூரியா உரம் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது. மொத்தம்1,778 டன் யூரியா உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராபி பருவத்தில் நெல் சாகுபடி
திருப்பூர் மாவட்டத்தில் பருவமழையை நம்பியும், பாசன பகுதிகளில் திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டும் கிணறு, ஆழ்குழாய் கிணறு மூலமாகவும், நெல் 11 ஆயிரம் எக்டரிலும், தானியங்கள் 57 ஆயிரம் எக்டரிலும், பயறு வகை பயிர்கள் 20 ஆயிரம் எக்டரிலும், நிலக்கடலை 10 ஆயிரம் எக்டரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர தென்னை நிலைப்பயிராக உள்ளது. வடகிழக்கு பருவ மழையையொட்டி ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக நெல் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கூறும்போது, 'செப்டம்பர் மாதத்துக்கு தேவையான யூரியா உரம் நேற்று 532 டன் ரெயில் மூலமாக திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்துள்ளது. இந்த உரம் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
1,778 டன் யூரியா உரம்
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1,778 டன் யூரியா உரம், 1,217 டன் டி.ஏ.பி.உரம், 935 டன் பொட்டாஷ் உரம், 4 ஆயிரத்து 626 டன் காம்ப்ளக்ஸ் உரம், 650 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் போதிய அளவு இருப்பு உள்ளது. உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
உரங்களுடன் பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. அவ்வாறு மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.திரவ உயிர் உரங்களை பெற்று பயன்பெறலாம் என்றார்.