கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,084 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி மையங்களில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 2,084 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி மையங்களில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று 2,084 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் முகாம்கள் நடைபெற்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு வீட்டிற்கு சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தி ஒட்டப்பட்டி, தர்மபுரி நகராட்சி பள்ளி மற்றும் மதிகோன்பாளையம் ஆகிய மையங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தந்த மையங்களில் போதுமான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதா? என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட தாய் சேய் நல அலுவலர் டாக்டர் ஈஸ்வரி, தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,084 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 42,096 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.