குழந்தைகள்-கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள்-கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் 5 வயது முடிய உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதில் விடுபட்ட மற்றும் இடம்பெயர்ந்த குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் 5.0 முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசி முகாம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை முதல்கட்டமாக 468 கர்ப்பிணிகள், 3 ஆயிரத்து 742 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
இதையொட்டி திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மருதாணிக்குளம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பூங்கொடி கலந்து கொண்டு இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாம் வருகிற 12-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தடுப்பூசி செலுத்தப்படும் கர்ப்பிணிகள், குழந்தைகளின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு உடனுக்குடன் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் வரதராஜன், அனிதா, மாநகராட்சி நகர்நல அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.