கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,126 மையங்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும் 38-வது மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,126 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது.
இதில் 2 ஆயிரத்து 746 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 5 ஆயிரத்து 665 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திகொண்டனர். இதுதவிர 11 ஆயிரத்து 629 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மொத்தம் 20 ஆயிரத்து 40 பேருக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.