வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது-மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்திலும் திருவிழா கொடியேற்றம்
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்திலும் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்திலும் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
கொடியேற்றம்
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் முக்கிய விழா வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியையும் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது.
திருப்பலி
9-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி. அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.
திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகர்
மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உயர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பால்ராஜ் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கூட்டுத்திருப்பலி நடந்தது.
விழாவில் வருகிற 7-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு அன்னையின் உருவ பவனி ஆலயத்தை சுற்றியுள்ள சாலைகளில் வந்து திருப்பலி நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக மறைக்கல்வி மாணவர் தினம், இளையோர் தினம், தொழிலாளர் தினம், சுற்றுச்சூழல் தினம், துறவியர் தினம், ஆசிரியர் தினம், பக்த சபைகள் தினம், தம்பதியர் தினமாக நடைபெறும்.
8-ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். இதைதொடர்ந்து அன்னையின் தேர்ப்பவனி நடக்கிறது. 9-ந் தேதி காலை நன்றி திருப்பலி நிறைவுற்றதும் அன்னையின் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அதிபரும் பங்குத்தந்தையுமான எட்வின் சகாயராஜ், உதவி பங்குத்தந்தை, மற்றும் பக்த சபையினர், இறைமக்கள் இணைந்து செய்துள்ளனர்.