வடிவேலு காமெடி பாணியில் அரிசி வாங்கி ஏமாற்றிய வாலிபர்
சினிமாவில் நடிகர் வடிவேலு ஏமாற்றி அரிசி வாங்கியது போன்று கச்சிராயப்பாளையம் பகுதியில் கடைகளில் அரிசி மூட்டைகளை ஏமாற்றி வாங்கி சென்ற வாலிபர் போலீசில் சிக்கினார்.
கச்சிராயப்பாளையம்,
தமிழில் வெளியான கி.மு. என்கிற சினிமா படத்திடல் நடிகர் வடிவேலு ஒரு அரிசிகடைக்கு சென்று அரிசி வாங்கும் நகைச்சுவை இடம் பெற்று இருக்கும்.
அதாவது, கடைக்கு செல்லும் நடிகர் வடிவேலு, தனக்கு 250 மூட்டை அரிசி வேண்டும். முன்னதாக ஒவ்வொரு ரகத்திலும் மாதிரி (சாம்பிள்) ஒரு கிலோ அரிசி தாருங்கள். அதனை நான் என் முதலாளியிடம் கொடுத்துவிட்டு வந்து 250 மூட்டை அரிசியை வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி அரிசியை வாங்கி சென்று ஏமாற்றுவார். இந்த நகைச்சுவை அனைவராலும் ரசிக்கப்பட்டதாகும்.
அதே பாணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பளையத்தில் ஒரு வாலிபர் அரிசிக்கடைக்கு சென்று ஏமாற்றி இருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
மளிகை வாங்க வந்த வாலிபர்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சுமார் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் கொளஞ்சியிடம் எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கு மொத்தமாக சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கொளஞ்சியிடம் என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பது குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுசீட்டையும் வழங்கியுள்ளார். அதன்படி கொளஞ்சி அந்த வாலிபர் கேட்டப்படி, மளிகை பொருட்களை தயார் செய்து ஒரு சாக்கில் மூட்டை கட்டினார். பின்னர் 3 அரிசி மூட்டைகளையும் சேர்த்து கொடுத்தார்.
திரும்பி வரவில்லை
அப்போது அந்த வாலிபர் எனக்கு தற்போது உடனடியாக அரிசி மட்டும் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் அரிசி மூட்டைகளை கொடுத்தால், அதனை வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு பணத்தை எடுத்து வருகிறேன். அதன்பின்னர் மளிகை பொருட்களை வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அதன்படி கொளஞ்சி அந்த வாலிபரிடம் அரிசி மூட்டைகளை கொடுத்தார். அதனை வாங்கி சென்ற அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. அதன் பின்னரே தன்னை ஏமாற்றிவிட்டு வாலிபர் அரிசி வாங்கி சென்றது கொளஞ்சிக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று மாதவச்சேரி பகுதியில் கொளஞ்சியை ஏமாற்றிய வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பார்த்த கொளஞ்சி, அந்த வாலிபரை மடக்கி பிடித்து கச்சிராயப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ஒரு கடை
அப்போது, அவர் கொளஞ்சியை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். மேலும், கொளஞ்சி பிடித்த போதும், அவர் அரிசி முட்டையுடன் தான் சென்று இருக்கிறார். அந்த மூட்டைகள் குறித்து விசாரித்த போது, மற்றொரு மளிகைக்கடை உரிமையாளரான திருமலை என்பவரிடம், கொளஞ்சியிடம் பின்பற்றிய அதே பாணியில் அரிசி மூட்டையை வாங்கி செல்வதாக தெரிவித்தார். இதேபோன்று மேலும் 3 பேரிட மும் அந்த வாலிபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதை கேட்டதும் போலீசார், அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.