வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம்


வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி  கூட்டம்
x

வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பேரூராட்சி கூட்டத்தில் அதன் தலைவர் கூறினார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்பு செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

அன்புசெழியன் (துணைத் தலைவர்):- வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்திற்குள் கடந்த ஒரு வாரமாக பஸ்கள் வந்து செல்கிறது. தினமும் பஸ்கள் வந்து செல்கிறதா? என்று கண்காணிக்க வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைநீர் வடிகால்

கார்த்திகேயன்:- பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிர்ப்புறம் அதிகளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன. புங்கனூர் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. எனவே, அந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வித்யாதேவி:- மருவத்தூர் மயான சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைக்கவும், மயானத்தில் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனா:-5-வது வார்டு இந்திரா நகரில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

ஆனந்த்: வைத்தீஸ்வரன் கோவிலை சுற்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

நிதி ஒதுக்கீடு

கூட்டத்தில் தலைவர் பேசுகையில், வைத்தீஸ்வரன் கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வடிகால் வசதி அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார்.

முடிவில் வரித்தண்டலர் அமுதா நன்றி கூறினார்.





Next Story