வைகை அணையை தூர்வார வேண்டும்:குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


வைகை அணையை தூர்வார வேண்டும்:குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-

கரும்பு விவசாயிகளுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். ரோஜா மலர்கள் உற்பத்தியை பெருக்க ரோஜா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மேல்மங்கலம், கீழவடகரை, கெங்குவார்பட்டி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும். வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

வைகை அணை

வைகை அணை தூர்வாரப்படாததால் 15 அடி ஆழத்துக்கு மண் படிந்துள்ளது. இதனால் தண்ணீர் முழுமையாக தேங்குவது இல்லை. இந்த அணையை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகளால் விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் சில கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய பதில் அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story