வறண்டுபோன வைகை ஆறு


வறண்டுபோன வைகை ஆறு
x
தினத்தந்தி 27 Aug 2023 7:30 PM GMT (Updated: 27 Aug 2023 7:30 PM GMT)

நிலக்கோட்டை பகுதியில் வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திண்டுக்கல்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. எப்போதும் ஆடி, ஆவணி மாதங்களில் அவ்வப்போது மழை பெய்து வெயிலின் தாக்கமும் குறையும். ஆனால் இந்த ஆண்டு வெயில் எவ்வளவு தூரத்திற்கு உச்சம் அடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதன் காரணமாக இந்த ஆண்டு ஆவணி மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தால் எப்படியும் மழை அதிக அளவு பெய்யும் என்று விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் ஆவணி மாதமும் வெயிலின் தாக்கம் அப்படியே இருந்து ஏமாற்றியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணி மாதத்திலும் வைகை ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. எப்போதும் இந்த அளவுக்கு கடுமையான வெயிலும் அதே சமயம் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பார்த்ததில்லை என்று விவசாயிகளும், பொதுமக்களும் புலம்பி தவிக்கின்றனர்.

இப்படியே மழை இல்லாமல் போனால் நிச்சயமாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும். ேமலும் அருகில் உள்ள சின்னாளப்பட்டி, செம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களும் பாதிக்கப்படும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் உள்ள உறைக்கிணறுகளையும் பராமரிக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படி இருப்பினும் மழை பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Tags :
Next Story