நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்


நெல்லை சந்திப்பு  கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்
x

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வைகாசி திருவிழா

நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றின் கரையில் கைலாசபுரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் கோவிலில் மட்டுமே பூஜைகள் நடைபெற்றன.

இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடைபெற்றது.

8-ம் நாளான நேற்று முன்தினம் காலையில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் வீதி உலா நடந்தது. மாலையில் பரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். தொடர்ந்து சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதிஉலா, இரவில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலா மற்றும் தேர் கடாட்சம் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி- அம்பாள் எழுந்தருளினர். காலை 8 மணிக்கு வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 9 மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

தேரோட்டத்தையொட்டி நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

10-ம் திருவிழாவான இன்று (புதன்கிழமை) காலையில் கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் சுவாமி-அம்பாள் தீர்த்தவாரியும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதலும் நடக்கிறது.


Next Story