கடலூர்பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
வைகாசி பெருவிழா
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதும், காலை 8.30 மணியளவில் வைகாசி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து இந்திர விமானத்தில் சாமி எழுந்தருளியதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்றது.
2-ந் தேதி தேரோட்டம்
தொடர்ந்து கோவிலில் தினசரி சிம்ம வாகனம், பூத வாகனம், நாக வாகனங்களில் சாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 29-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 30-ந் தேதி வெள்ளி ரதம் மற்றும் இந்திர விமானத்தில் வீதிஉலாவும், 31-ந் தேதி பரிவேட்டையும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி திருஞானசம்பந்தர் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.