பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
தேரோட்டம்
11-ந்தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல், 12-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.