அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா


அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வைகாசி திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் விழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டத்துடன் அய்யாவழி பக்தர்கள் 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா'என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்தனர். தொடர்ந்து காலை 6 மணிக்கு திருவிழா கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியை குரு பாலஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடந்தது.

விழாவில் இன்று இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிபடிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள்,அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைப்பதி வளாகத்தில் காலை மதியம், இரவு மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

கலிவேட்டையாடுதல்

8-ம் திருவிழாவான அடுத்த மாதம்(ஜூன்) 2-ந்தேதி மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலித்தல், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

9-ம் நாள் விழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் விழாவில் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் இறுதிநாளான 5-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story