நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா
சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வைகாசி பெருந்திருவிழா
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான இந்த விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 24-ந்தேதி மாலை அனுக்கை மற்றும் விக்னேஸ்வர பூஜை, சாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 11.20 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், மாலை 6.10 மணிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு வெள்ளி கேடகத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளி கேடகத்திலும், இரவு 7 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
தேரோட்டம்
வரும் 31-ந்தேதி காலை சயன அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தங்க ரதத்தில் உள் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் காலையில் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந்தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி உற்சவ சாந்தியும், மாலையில் வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் மெ.ராம.முருகப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.