விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகன் கோவில்
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந் தேதியன்று முருக பெருமான், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மூலவர் சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது.
2-ந்தேதி தேரோட்டம்
அதனைத் தொடர்ந்து வருகிற 2-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி கோவில் அடிவாரத்தில் உள்ள தேரை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து தூய்மை செய்யும் பணி முடிந்து இன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.