வைகாசி விசாக திருவிழா; திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
வைகாசி விசாக திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விசாக தினத்தன்று முருக பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவில் இராக்கால அபிஷேம் நடைபெற்றது..
சாப விமோசனம்
விசாக திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறும்..
பாத யாத்திரை பக்தர்கள்
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். கோவில் வளாகம், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.
சிறப்பு பஸ்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டது. விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.