வைகாசி விசாக திருவிழா:திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்


தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முருகப்பெருமான் பிறந்த நாளான நேற்று சுவாமியை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இதையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர். அதிகாலையில் இருந்தே அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று, அரோகரா பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிலர் அங்க பிரதட்சணம் செய்தும், அடிப்பிரதட்சணம் செய்தும் சுவாமியை வழிபட்டனர்.

பலத்த பாதுகாப்பு

பக்தர்கள் வசதிக்காக நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் வளாகத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் வந்த பெரிய வாகனங்கள் நகரின் எல்லைப்பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நகர்ப்பகுதியில் போலீசார் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டு இருந்தது. நகர்ப்பகுதியில் பக்தர்களுக்கு சில அமைப்பினர் அன்னதானம் வழங்கினர். மேலும், நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

இன்று

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story