பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம் கிராமத்தில் வட்டமலை கரை ஓடை அணை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 600 ஏக்கர் பரப்பளவில் வெள்ளகோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணைக்கு கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு கடந்த மாதம் 2-வது முறையாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஓரளவு கிணத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. தண்ணீர் கடந்த 25 ஆண்டுகளாக செல்லாததால் கிளை வாய்க்காலில் ஒரு சில பகுதிகளில் தூர்வாரப்படாமல் மூடி கிடந்ததால் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சென்றடையவில்லை. அதனால் தற்போது பொதுப்பணித்துறை துறையினர் மூலம் தற்போது இடது, வலது பாசன கிளை வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.