பராமரிப்பில்லாத ராஜவாய்க்கால் கரைகள்
குமரலிங்கம் அருகே ராஜவாய்க்கால் கரைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆயக்கட்டு
மடத்துக்குளம் வட்டாரத்தின் முக்கிய பாசன ஆதாரமாக அமராவதி அணை உள்ளது.அணையிலிருந்து ராஜாவாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7520 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் பாசன வாய்க்கால்கள் மற்றும் கரைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ராஜவாய்க்கால் முழுவதும் பல இடங்களில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. கழிவுநீரில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட ஆகாயத்தாமரைகளின் அபரிதமான வளர்ச்சி, வாய்க்காலில் கலக்கும் கழிவுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
கடைமடைக்கு சிக்கல்
அதிக அளவில் நீரை உறிஞ்சி ஆவியாக்கும் குணம் கொண்ட ஆகாயத் தாமரைகளால் அதிக அளவில் நீர் இழப்பு ஏற்படுகிறது. மேலும் ராஜவாய்க்கால் கரைகள் முறையாக பராமரிக்கப்படாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. கரைகளே வழித்தடமாக பயன்படுத்தப்படுவதுடன் வாய்க்காலை அதிகாரிகள் கண்காணிக்கவும் பராமரிக்கவும் உதவியாக இருக்கின்றன. ஆனால் அந்த கரைகளில் பராமரிப்பே கேள்விக்குறியாக இருப்பதால் நீர்த் திருட்டு உள்ளிட்டவற்றை தடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும் புதர் மண்டிக்கிடப்பதால் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் வாய்க்கால் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் கடைமடைகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே ராஜாவாய்க்கால் மற்றும் கரைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு விவசாயிகள் கூறினர்.