தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழா: டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு


தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழா:  டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் கட்சி நிர்வாகிகள் இடைேய தகராறு ஏற்பட்டது.

தேனி

ஆவணப்படம்

ம.தி.மு.க. சார்பில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழா தேனியில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். இதையடுத்து தியேட்டரில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

அப்போது சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துரை வைகோ மற்றும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் ஆவணப்படத்தை பார்த்தனர். மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் ஆவண படத்தை பார்த்தனர்.

முல்லைப்பெரியாறு

இதையடுத்து துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 16-வது நகரமாக தேனியில் தற்போது மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வைகோ எனும் தமிழ் போராளியின் தியாகங்கள், உழைப்பு குறித்து பிரமிக்க வைக்கும் வகையில் இந்த படம் உருவாகி உள்ளது. திருவள்ளுவரின் கருத்தை உலகம் பாராட்டுகின்றது.

அவருக்கு காவி வேட்டி அணிவித்து குறிப்பிட்ட மதத்துக்குள் அவரை புகுத்தி மலிவான அரசியல் செய்யும் தமிழக கவர்னர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படுகிறாா். முல்லைப்பெரியாறு அணை குறித்து 600 கிராமங்களுக்கு வைகோ சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரளா தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு காலமும் ம.தி.மு.க. முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை விட்டுக் கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story