கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளார்-எருமியாம்பட்டியில் வைகோ பேச்சு
தர்மபுரி, அக்.28-
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எருமியாம்பட்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போலீஸ் டி.ஜி.பி.யிடம் பேசி நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். அந்த காரில் சிதறி கிடந்த உடல் யாருடையது என 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து, அவருடன் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்த நாட்டை குட்டிச்சுவராக்க நினைப்பவர்கள், மதக்கலவரத்தை உருவாக்க நினைப்பவர்கள், திராவிட சித்தாந்தத்தை உடைக்க நினைப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.