ஈரோட்டில் இருந்து கேரளாவுக்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு வாகன பிரசார பயணம்


ஈரோட்டில் இருந்து கேரளாவுக்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு வாகன பிரசார பயணம்
x

ஈரோட்டில் இருந்து கேரளாவுக்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு வாகன பிரசார பயணம் தொடங்கியது. அதனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

வைக்கம் போராட்டம்

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி டி.கே.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே.பி.கேசவ மேனோன் உள்ளிட்டோர் முன்னிலையில் வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் அப்போதைய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார் நேரடியாக கலந்துகொண்டு வழிநடத்தினார். இதற்காக அவர் கைதாகி சிறை தண்டனையும் பெற்றார். 603 நாட்களாக நடந்த இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 603 நாட்கள் கொண்டாட கேரள அரசு முடிவு செய்து உள்ளது.

வாகன பிரசார பயணம்

இந்த நிலையில் தமிழ்நாடு-கேரள காங்கிரஸ் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு வாகன பிரசார பயணம் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நேற்று காலை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி, கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் பெரியார், கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

பெரியாரால் பெருமை

அப்போது கே.எஸ்.அழகிரி பேசும்போது, "வைக்கம் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்த பெரியார் நேரடியாக கலந்துகொண்டார். அவர் வழிநடத்திய போராட்டத்தின் காரணமாக 5 ஆயிரம் ஆண்டாக இருந்து வந்த மக்களின் அவமானம் தகர்க்கப்பட்டது. எனவே பெரியார் மூலமாக ஈரோட்டுக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பெருமை ஏற்பட்டது.

இந்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு வாகன பிரசார பயணத்தை காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. காலையில் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாலும், தனது இதயம் முழுவதும் ஈரோட்டில் வைக்கம் போராட்டம் நினைவு பிரசார பயணத்தை சுற்றிதான் வருகிறது என்று தெரிவித்ததுடன், இது தொடர்பாக என்னிடம் விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார்", என்றார்.

விழிப்புணர்வு பிரசாரம்

நிகழ்ச்சியில் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வி.டி.பல்ராம், சி.சந்திரன், பி.ஏ.சலீம், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மோகன் குமாரமங்கலம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் மற்றும் திருப்பூர், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் இருந்து தொடங்கிய வாகன பயணம் திருப்பூர், கோவை மாவட்டங்கள் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்றது. முன்னதாக செல்லும் வழியில் வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் வைக்கம் போராட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


Next Story