உத்திர ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ரத்து
கும்பாபிஷேக திருப்பணிகளையொட்டி பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் 2 ஆண்டுகள் வைகுண்ட ஏகாதசி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்பாபிஷேகம்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி நடந்தது. 12 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி ராஜகோபுரத்துக்கான பாலாலயம் நடக்க உள்ளது.
தொடர்ந்து 2025-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் திருப்பணிகளை முடித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருக்கல்யாணம்
அடுத்த மாதம் 3-ந் தேதி பாலாலயம் நடத்த உள்ளதால் அன்று முதல் கும்பாபிஷேகம் நடக்கும் வரை கோவிலுக்கு வெளியே உற்சவர் புறப்பாடு நடக்காது. கோவிலுக்குள் மூலவர் மற்றும் உற்சவரை தரிசப்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உத்திரரங்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. முன்னதாக காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு மூலவர் ஏகாந்த திருமஞ்சனம், பூவங்கி சேவை, 11 மணிக்கு உற்சவர் அலங்கார திருமஞ்சனம், திருப்பாவை ஆகியவையும், மாலை 5 மணிக்கு மாலை மாற்றுதல், ஒய்யாளி ஊஞ்சல், ஹோமம், ஆச்சார்யவர்ணம், அம்மி மிதித்தல், திருமாங்கல்யதானம், சீர்பாடல், ஆசீர்வாதம், சேத்தி அறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ரத்து
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி நரசிம்மமூர்த்தி, தக்கார் சுரேஷ்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்காது என்றும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.