தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழா:வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கோவிலில் கோபூைஜை, விசுவரூப தரிசனம் நடந்தது. சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அர்ச்சகர் வைகுண்டராமன் தலைமையில் சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
மாலையில் சொர்க்கவாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக வைகுண்டபதி பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி வந்தார். அப்போது வாசல் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நம்மாழ்வாரிடம் ஆசி பெறும் நிகழ்ச்சி நடந்தது. பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.