திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சி அளித்த வைகுண்டபதி பெருமாள்
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். காக்கும் கடவுளான பெருமாளை புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்கினால் நாம் வேண்டுவதை அளித்து நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள் புரிவார் என்பது இந்துக்களில் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 4-வது சனிக்கிழமை விழா கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
வெங்கடாசலபதி அலங்காரம்
இந்த மாதம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் சத்தியநாராயணா அலங்காரத்திலும், 2-வது சனிக்கிழமையில் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், 3-வது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதுபோல் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.