பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி தரிசனம்


தினத்தந்தி 2 Jan 2023 3:35 PM IST (Updated: 2 Jan 2023 6:25 PM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாள வழிபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாள வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசி

பெருமாள் கோவில்களில் மார்கழி மாதங்களில் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக வந்து பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளிப்பார். சொர்க்கவாசல் வழியாக வந்து வழிபட்டால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கடும் குளிரையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நீராடி அதிகாலையிலேயே சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் அவர்கள்பெருமாளுடன் சொர்க்கவாசல் வழியாக வந்து வழிபட்டு கோவிந்தா, கோவிந்தா என கூறி பரவசம் அடைந்தனர்.

ஆரணி நகரில் சார்பனார் பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் கருவறையில் பெருமாள் அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து உற்சவர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜகோபுரத்தின் வழியாக சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த கோவிலுக்கு திரும்பினார்.அதனைத் தொடர்ந்து மார்கழி உற்சவம் திருப்பாவை பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

ஆரணி தச்சூர் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், கொசப்பாளையம் அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதேபோல் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்களில் சாமிக்கு முத்துக்களால் ஆன முத்தங்கி அலங்காரம் செய்திருந்தனர். அதிகாலையிலேயே சொர்க்கவாசல் வழியாக உற்சவர் சாமியை கொண்டு வரப்பட்டு பின்னர் கருவறையிலேயே உற்சவ சாமிகளை வைக்கப்பட்டது. காலை முதல் இரவு வரை திரளாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

ஆயன்மலை

வாணாபுரம் அருகே உள்ள ஆயன் மலை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் காட்சியளித்தார். இதனையடுத்துஅபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கம்

செங்கத்தில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் நடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story