பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்க பேனா -வைரமுத்து வழங்கினார்


பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்க பேனா -வைரமுத்து வழங்கினார்
x

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து பரிசளித்தார்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் பொன் சீனிவாசன் தெருவை சேர்ந்த தச்சுத்தொழிலாளி சரவணக்குமார் மகள் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு, கவிஞர் வைரமுத்து அண்மையில் நடந்த சினிமா விழாவில் தனக்கு பரிசாக கிடைத்த தங்க பேனாவை நேரில் வந்து வழங்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

தங்க பேனா பரிசு

அதன்படி நேற்று காலையில் திண்டுக்கல் வந்த கவிஞர் வைரமுத்து, பொன் சீனிவாசன் தெருவில் வசிக்கும் மாணவி நந்தினி வீட்டுக்கு சென்றார். பின்னர் மாணவி நந்தினியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், அவரின் பெற்றோருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் மாணவிக்கு தங்க பேனாவை பரிசாக கொடுத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கல்வி என்பது மாடத்தின் உச்சத்தில் அல்ல, மாளிகையில் அல்ல, ஒரு ஏழை ஓலை குடிசையில் கூட உச்சம் தொட்டு எரியும் என்பதற்கு நந்தினி சாட்சி. நான் மாணவி நந்தினியை ஒரு அதிசயமாக பார்க்கிறேன் என்றார்.

மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து கொடுத்த தங்க பேனா 12.350 கிராம் (1½ பவுன்) எடை கொண்டதாகும். அந்த பேனா எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த பேனா மூலம் தனது நாட்குறிப்பில் மாணவி நந்தினி ஆசையுடன் எழுதி பார்த்தார்.


Next Story