சசிகலாவுடன், வைத்திலிங்கம் 'திடீர்' சந்திப்பு
சசிகலாவுடன், வைத்திலிங்கம் ‘திடீர்’ சந்திப்பு
ஒரத்தநாடு
தஞ்சை அருகே சசிகலாவுடன், வைத்திலிங்கம் திடீரென சந்தித்து பேசினார்.
சசிகலா-வைத்திலிங்கம்
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.கே.சசிகலா தஞ்சைக்கு வந்துள்ளார். தஞ்சையில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற சசிகலா அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மன்னார்குடியில் இருந்து மீண்டும் தஞ்சைக்கு நேற்று காரில் புறப்பட்டு வந்தார்.
இதேபோல் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாட்டை அடுத்த காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கன்குடிகாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் சென்றார்.
'திடீர்' சந்திப்பு
காவாரப்பட்டு அருகே ஓவல்குடி என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது சசிகலா வந்த காரும், வைத்திலிங்கம் சென்ற காரும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. இருவரது கார்களும் எதிர், எதிரே வந்தது.
அப்போது சசிகலாவின் காரை பார்த்த .வைத்திலிங்கம் தனது காரில் இருந்து இறங்கி வந்து சசிகலாவுக்கு வணக்கம் தெரிவித்தார். உடனே சசிகலாவும் காரில் இருந்து கீழே இறங்கி வந்து வைத்திலிங்கத்திற்கு வணக்கம் தெரிவித்தார்.
சாக்லெட் கொடுத்தார்
அப்போது வைத்திலிங்கம் அருகில் நின்ற ஒருவர், இன்று அண்ணனுக்கு(வைத்திலிங்கம்) பிறந்த நாள் என்று கூற, அப்படியா... என்று மகிழ்ச்சியோடு வாழ்த்து சொன்ன சசிகலா உடனே வைத்திலிங்கத்திற்கு சாக்லெட் கொடுத்தார். இருவரும் தொண்டர்கள் மத்தியில் சாலையோரத்தில் நின்று 5 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பரபரப்பு
சசிகலா, டி.டி.வி.தினகரனை நேரில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்த நிலையில் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம் முதலில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.