அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பில் வையாபுரிக்குளம்


அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பில் வையாபுரிக்குளம்
x

அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள வையாபுரிகுளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

ஆன்மிக-சுற்றுலா நகரான பழனியின் மையப்பகுதியில் வையாபுரிக்குளம் அமைந்துள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்துக்கு வரதமாநதி அணையில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் வரத்து ஏற்படுகிறது. இந்த குளத்தின் மூலம் சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்த நிலங்களில் நெல், தென்னை, கரும்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் குளத்தில் மீன் வளர்க்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

கழிவுநீரால் மாசடைந்த குளம்

வையாபுரிக்குளம் நிரம்பினால் பழனி நகரை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் பழனி நகரின் முக்கிய நீராதாரமாகவும் வையாபுரிக்குளம் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற குளத்தை ஒருகாலத்தில் மக்கள் நேரடியாக பயன்படுத்தினர்.

அதாவது பொதுமக்கள், பக்தர்கள் இங்கு தினமும் நீராடி வந்தனர். ஆனால் காலப்போக்கில் வணிகமயம், நகர் வளர்ச்சி என்ற பெயரில் வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்தது. இதனால் குளம் மாசடைந்து மக்கள் பயன்பாட்டை விட்டு தூரம் சென்றுவிட்டது. அதேபோல் கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாகவும் குளத்தின் கரையோர பகுதி மாறியது.

அமலைச்செடி ஆக்கிரமிப்பு

இந்தநிலையில் தற்போது பழனி வையாபுரிக்குளம் அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அமலைச்செடிகள் அதிகமாக உள்ளதால் தண்ணீரே தெரியாத அளவுக்கு குளம் காட்சியளிக்கிறது. எனவே வரலாற்று சிறப்பு மிக்க பழனி வையாபுரிக்குளத்தில் அமலைச்செடிகளை அகற்றி தூய்மையாக வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மாரி (வியாபாரி, பழனி):- பழனியில் அடிவாரம், நகர் ஆகியவற்றை இணைக்கும் குளத்துரோடு வையாபுரிக்குளம் வழியாக செல்கிறது. எனவே பழனிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் வையாபுரிக்குளம் முன்பு நின்றவாறு 'செல்பி' எடுத்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது வையாபுரிக்குளம், சிறுநாயக்கன்குளம் ஆகியவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமலைச்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் குளத்தின் நீர் எளிதில் ஆவியாவதோடு துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படகு குழாம்

கார்த்திகுமார் (விவசாயி, அடிவாரம்):- பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் சேர்வதால் தான் அமலை செடிகள் அதிகமாக வளர்கிறது. மேலும் கரையோரத்தில் குப்பைகளும் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே குளத்து நீர் மாசுபடுவதை தடுக்க அமலைச்செடிகளை அகற்ற வேண்டும். மேலும் குளத்தில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

பிரசாந்த் (தனியார் நிறுவன ஊழியர், பழனி):- பழனியில் முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு போதிய அளவில் சுற்றுலா வசதிகள் இல்லை. எனவே பழனி வரும் பக்தர்கள் சுற்றுலாவுக்காக கொடைக்கானல் செல்லும் நிலை உள்ளது. எனவே பழனி வையாபுரிக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன் அமலைச்செடிகளை அகற்றிவிட்டு படகு குழாம் அமைத்தால் குளம் மாசடைவது தடுக்கப்படும். சுற்றுலாவும் வளர்ச்சி பெறும். இதனால் உள்ளூரிலும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

======

சிறப்பு திட்டத்தில் வையாபுரிக்குளம்

பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடியில் சிறப்பு திட்ட வரைவு உள்ளதாகவும், அதில் பழனி வையாபுரிக்குளம் சீரமைப்பும் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எனவே சிறப்பு திட்டம் தொடங்கினால் பழனி வையாபுரிக்குளமும் சுத்தப்படுத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story