குறைந்த மீன்களுடன் கரை திரும்பிய வள்ளம் மீனவர்கள்
குளச்சலில் வள்ளம் மீனவர்கள் வலையில் குறைந்த அளவிலான மீன்கள் கிடைத்தன. இதனால், மீன்கள் விலை உயந்து காணப்பட்டது.
குளச்சல்:
குளச்சலில் வள்ளம் மீனவர்கள் வலையில் குறைந்த அளவிலான மீன்கள் கிடைத்தன. இதனால், மீன்கள் விலை உயந்து காணப்பட்டது.
குறைந்த மீன்களுடன்...
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வள்ளம் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.
மேலும், தடைக்காலம் காரணமாக விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லாததால் மீன் வரத்து இன்றி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் விசைப்படகுகள் மற்றும் வள்ளம் மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அதன்படி நேற்று காலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வள்ளம் மீனவர்கள் வலையில் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.
விலை உயர்வு
மீன்களின் வரத்து குறைந்ததால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
அதன்படி சாதாரணமாக ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையாகும் கட்டில் கணவாய் மீன் ரூ.500-க்கும், ரூ.250-க்கு விற்பனையாகும் சூரை மீன் ரூ.350-க்கும், ரூ.100-க்கு விற்பனையாகும் வாளை மீன் ரூ.200-க்கும், ரூ.100-க்கு விற்பனையாகும் அயிலை மீன் ரூ.250-க்கும் விற்பனையானது. இதனால் மீன் வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்கள் கவலையடைந்தனர்.