வல்லநாடு தனியார் கல்லூரி வளாகத்தில்அரசு மாதிரி பள்ளி தொடங்க ஆயத்த பணிகள்


வல்லநாடு தனியார் கல்லூரி வளாகத்தில்அரசு மாதிரி பள்ளி தொடங்க ஆயத்த பணிகள்
x

வல்லநாடு தனியார் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி தொடங்க ஆயத்த பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

வல்லநாடு தனியார் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாதிரி பள்ளி

தமிழகத்தில் ஆர்வமும், திறமையும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரிப் பள்ளி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பையும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில் முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்தலும், சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமைகளை மெருகேற்றி இணை கல்விச் செயல்களை மேம்படுத்துதலும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் இந்த பள்ளியின் முக்கிய நோக்கம் ஆகும். முதல் கட்டமாக 25 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தூத்துக்குடி உள்பட மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில்2023-24-ம் ஆண்டு முதல் மாதிரி பள்ளி தொடங்கப்பட உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்பட உள்ளது. அந்த வகையில், 9-ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 11-ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும், 12-ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 800 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில் 2023-24-ம் கல்வியாண்டில் பள்ளி தொடங்க உள்ளது. இந்த மாதிரிப் பள்ளி உண்டு உறைவிடப்பள்ளி என்பதால் மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 400 மாணவர்களுக்கு ஒரு விடுதியும், 400 மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்பட உள்ளது.

ஆய்வு

இந்த பள்ளிக்கூடம் தற்காலிகமாக வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகக் கட்டிடத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மண்டல ஒருங்கிணைப்பாளர் (மாதிரிப் பள்ளிகள்) ஜெயஸ்ரீ, மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) பெ.கணேசன், இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி செயலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story