வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவை புறக்கணித்த பொதுமக்கள்


வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவை புறக்கணித்த பொதுமக்கள்
x

கோட்டநத்தத்தில் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

ராணிப்பேட்டை

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தேர் வேலைப்பாடுகள் மற்றும் உற்சவர் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கோட்டநத்தம் கிராம மக்கள் தொன்றுதொட்டு செய்து வருகின்றனர். இந்தநிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி நேற்று முன்தினம் முதல் கோட்டநத்தம், சின்னகீசகுப்பம், மேல்பாடி, சோமநாதபுரம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெறுவதற்கு முன்பு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

கோட்டநத்தம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவரை திருவீதி உலா எடுத்துச் சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று பத்திரிகைகளில் தங்கள் ஊர் பெயர் இடம் பெறவில்லை என்று கோட்டநத்தம் நாட்டாண்மைதாரர்கள் வேல்முருகன், செல்வம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோட்டநத்தம் அண்ணா சிலை அருகே சுவாமி புறப்பாட்டை புறக்கணிப்பு செய்தனர்.

இதனை அறிந்த கோவில் நிர்வாகம் மற்றும் மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதன் பேரில் அவர்கள் சமரசம் அடைந்தனர்.

பின்னர் சுவாமி திருவீதிவுலா ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனால் சுவாமி திருவீதி உலா நடைபெறுவது தாமதமானது. இந்த சம்பவத்தால் கோட்டநத்தம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.


Next Story