மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
50 சதவீத மானியத்துடன் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேவை மையங்கள்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 'மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள்' மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு 22 மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க ரூ.1 கோடியே 1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
விவசாயிகள் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள், விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.
வேளாண் விளை பொருட்களை மதிப்புகூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம். கேழ்வரகு சுத்தப்படுத்தி கல்நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித் தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்துதரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாயக் குழுக்கள் தங்களுக்கு எந்தவகை எந்திரங்கள், எவ்வளவு எண்ணிக்கையில் தேவையோ அவற்றை மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி, மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பம்
அந்த 50 சதவீத மானியம் என்பது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வேளாண் பொறியியல் துறை மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை mls.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.