ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேன் கவிழ்ந்து விபத்து
காங்கயம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பிறகும் வேனின் கேபினுக்குள் அமர்ந்த மது குடித்த டிரைவர் பொதுமக்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
காங்கயம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பிறகும் வேனின் கேபினுக்குள் அமர்ந்த மது குடித்த டிரைவர் பொதுமக்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி ஊராட்சி சண்முகம்பாளையம் பகுதி வளைவில் நேற்று முன்தினம் அரிசி ஏற்றி வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். அப்போது கவிழ்ந்த வேனுக்குள் அமர்ந்து அதன் டிரைவர் மதுபாட்டில்களை வைத்து மது குடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை சத்தம் போட்டனர்.
இதனால் அந்த டிரைவர் வேனை அப்படியே போட்டு விட்டு அந்த வழியாக வந்த காரில் லிப்ட் கேட்டு தப்பியுள்ளார். இது குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். பின்னர் வேனில் இருந்த அரிசி மூட்டைகளை பார்வையிட்டனர். அப்போது அங்கு 35 மூட்டைகளில் அரிசி இருந்தது. அவை அனைத்தும் ரேஷன் அரியாகும். இந்த ரேஷன் அரிசி எங்கு கடத்தி செல்லப்பட்டது என்று தெரியவில்லை.
பறிமுதல்
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்த வேன், 1800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன்அரிசியை கடத்தி வந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் யார்? வேனின் உரிமையாளர் யார் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.