இரும்பு கம்பத்தில் வேன் மோதி டிரைவர் பலி
வடமதுரை அருகே இரும்பு கம்பத்தில் வேன் மோதி டிரைவர் பலியானார்.
கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள கோட்டாலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் உசேன் (வயது 32). மினி வேன் டிரைவர். இவர், ஒரு மினி வேனில் முட்டை லோடு ஏற்றுவதற்காக காலி அட்டைகளுடன் காஞ்சீபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். வேனில் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (31) என்பவரும் பயணம் செய்தார். நேற்று அதிகாலை திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமதுரை நால்ரோடு சந்திப்பு அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த இரும்பு கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்த உசேன், ரியாஸ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உசேன் பரிதாபமாக பலியானார். ரியாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.