மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தொழிலாளி பலி
x

வடகாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி பலியானார். இழப்பீடு கேட்டு பால் நிறுவனத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

தொழிலாளி பலி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே கீழாத்தூர் கட்ராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வடகாட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கீழாத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கீழாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் இருந்து வெளியே பால் ஏற்றி வந்த சரக்கு வேன் சந்திரசேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

முற்றுகை

இதற்கிடையே சந்திரசேகர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், விபத்து நடந்த உடனேயே சந்திரசேகரை சிகிச்சைக்கு தூக்கிச் சென்றிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் விபத்து ஏற்படுத்திய பால் நிறுவன சரக்கு வேன் ஊழியர்கள், யாருக்கும் தகவல் சொல்லாமல் காலதாமதமாக கொண்டு சென்றதால் அவர் இறந்து விட்டார் என்று கூறி சந்திரசேகரின் உறவினர்கள் தனியார் பால் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் மற்றும் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story